காமம் அகற்றிய தூயனடி சிவ காம சவுந்தரி நேயனடி! மாமறை யோதுசெவ் வாயனடி மணி மன்றெனு ஞானவா காயனடி! ஆனந்தத் தாண்டவ ராசனடி நமை ஆட்கொண் டருளிய தேசனடி! வானந்த மாமலை மங்கைமகிழ் வடி வாளன டிமண வாளனடி! கல்லைக் கனிவிக்குஞ் சித்தனடி முடி கங்கைக் கருளிய கர்த்தனடி! தில்லைச் சிதம்பர சித்தனடி தேவ சிங்கம டியுயர் தங்கமடி! பெண்ணொரு பால் வைத்த மத்தனடி சிறு பிள்ளைக் கறிகொண்ட பித்தனடி! நண்ணி நமக்கருள் அத்தனடி மிக நல்லனடி யெல்லாம் வல்லனடி! அம்பலத் தாடல்செய் ஐயனடி - அன்பர் அன்புக் கெளிவரு மெய்யனடி! தும்பை முடிக்கணி தூயனடி! சுயச் சோதிய டிபரஞ் சோதியடி!